தொழிலாளி சுடலையாண்டி, கந்துவட்டி புகார் கொடுக்க குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது எடுத்தபடம். 
செய்திகள்

4 பேர் தீக்குளித்து பலி: மேலும் பலர் கந்துவட்டி புகார்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் பலர் கந்து வட்டி குறித்து புகார் அளித்துள்ளனர்.

மாலை மலர்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனனவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி ஆருண்யா, அக்‌ஷயா ஆகியோர் கந்து வட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து கந்து வட்டி புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனால் கந்து வட்டி கொடுமைக்கு ஆளான பலர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து வருகிறார்கள்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் மேலும் இரு குடும்பத்தினர் கந்துவட்டி புகார் கொடுத்துள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். மரம் ஏறும் தொழிலாளி. இவர் தனது மனைவி லதா, மகன் அஜய், மகள்கள் ராசாத்தி, மகாலட்சுமி, ஆகியோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு ஆரைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். இதற்காக 3 ஆண்டுகளில் ரூ. 18 ஆயிரத்து 500 வரை கொடுத்துள்ளேன். சில மாதங்கள் வட்டி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் என்னை தகாத முறையில் பேசி மிரட்டுகின்றனர்.

இது குறித்து கடந்த மாதம் 17-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தேன். முன்னீர் பள்ளம் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்களை அருகில் வைத்துக் கொண்டு ஜனவரி மாதத்திற்குள் நான் 15 ஆயிரத்தை கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கைது செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நெல்லை அருகே உள்ள குறிச்சி குளத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் மனைவி மைதீன்பாத்து. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், எங்கள் பகுதியை சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள் எனது தாயாரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வீடு, நிலத்தை அபகரித்து விட்டனர். எங்களது நிலம் மற்றும் வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

திண்டுக்கல் பேகம்பூர் அருகே பள்ள பட்டியை சேர்ந்தவர் ஜான்பசீர்சேட் அச்சக ஊழியர். இவர் தனது மகள் திருமணத்திற்காக திண்டுக்கல் நத்தர்ஷா தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.4 லட்சம் கடனாக பெற்றார். மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

சில மாதங்களாக வட்டி செலுத்த முடியாமல் தவித்தார். வட்டி பணம் கேட்டு அப்துல்ரசாக் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். இதனால் மனமுடைந்த ஜான்பசீர்சேட் வி‌ஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சாதிக்அலி. மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த நிஜாம் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதற்காக வட்டி கட்டி வந்த சாதிக் அலி சில மாதங்களாக பணம் கட்ட முடியாமல் தவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நிஜாமின் மகன் அசார் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து சாதிக்அலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை ராமலிங்கனார் 10-வது தெருவைச் சேர்ந்தவர் அருள்செல்வம். தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி மகாலட்சுமி.

குமுதவல்லி என்ற பெண்ணிற்கு ரூ.15 லட்சம் பணத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற பெண்ணிடம் மகாலட்சுமி வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். இந்த தொகைக்கான வட்டி மற்றும் அசல் பணத்தை மகாலட்சுமி திருப்பி செலுத்தி விட்டதாக தெரிகிறது.


ஆனால் மகாலட்சுமி கையெழுத்து போட்டு கொடுத்த ஆவணங்களை திருப்பி தராமல் கோவிந்தம்மாள் தரப்பினர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். நேற்று காலை மகாலட்சுமி வீட்டிற்கு சென்று கோவிந்தம்மாள் தரப்பினர் மிரட்டியுள்ளனர். இதனால் கோவிந்தம்மாள் வீட்டின் முன்பு திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்தனர்.

அங்கு வந்த போலீசாரிடம் மகாலட்சுமி கூறியதாவது:-

நான் கோவிந்தம்மாள் என்பவரிடம் வட்டிக்கு ரூ.15 லட்சம் கேட்டேன். பல்வேறு தவணைகளாக வட்டி மற்றும் அசல் சேர்த்து ரூ.20 லட்சம் வரை கொடுத்துள்ளேன். எனினும் கோவிந்தம்மாள் ரூ.50 லட்சம் கேட்டார். அதிர்ச்சி அடைந்த நான் ரூ.5 லட்சம் காசோலை கொடுத்தேன். அவர் மேலும் ரூ.45 லட்சம் தர வேண்டும் இல்லைஎன்றால் வீட்டை எழுதி கொடு என்று மிரட்டி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மகாலட்சுமி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். போலீசார் மற்றும் பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் நிலையத்தில் அவரிடமும், கோவிந்தம்மாள் தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் குட்டி என்ற சுடலையாண்டி. இவர் அந்த பகுதியை சேர்ந்த கோமதி சங்கரிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கினார். வாரம்தோறும் ரூ.200 கந்துவட்டி கட்டினார். 7 வாரம் வட்டி கட்டிய நிலையில் சில மாதம் வட்டி கட்டவில்லை.

இந்த நிலையில் ரூ.22 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கோமதி சங்கரும் அவரது ஆதரவாளர்களும் சுடலையாண்டியை அடித்து உதைத்து அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்து சென்று விட்டனர். அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கந்துவட்டி குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி சங்கரை கைது செய்தனர்.

சுரண்டை அருகே உள்ள வேலப்பநாடானூரை சேர்ந்த மாணிக்கசாமி சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

வேலப்பநாடானூரை சேர்ந்த முருகனிடம் ரூ.70 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கட்டினேன். மேலும் ரூ.60 ஆயிரம் வேண்டும் என்று கூறி முருகன், அவரது மகன் ரமேஷ், ராமர் ஆகிய 3 பேரும் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.