செய்திகள்

போராட்டக்காரர்கள் கல்வீச்சு - ரத்தம் வழிந்த நிலையிலும் கடமை உணர்வுடன் பணியாற்றிய காஞ்சி எஸ்.பி.

போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியபோதும், கடமையுடன் பணியாற்றிய காஞ்சிபுரம் எஸ்.பி.க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை:

மறைமலைநகரை அடுத்த மகேந்திரா சிட்டி அருகே நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் லாவண்யா என்ற பெண் உயிரிழந்தார். அவரது கணவர் புஷ்பராஸ், மகன் நிஷாந்த் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் லாவண்யாவின் உறவினர்கள் மற்றும் திருத்தேரி, மகேந்திரா சிட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக கூறி அவர்கள் சென்னை-திருச்சி சாலையில் இரு பக்கங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். உடலையும் எடுக்க விடவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடியையும் நொறுக்கினர். அப்போது கூட்டத்தில் இருந்து பறந்து வந்த கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியின் தலையில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.

அப்போது அவருடன் இருந்த போலீஸ்காரர்கள், மருத்துவரிடம் செல்லலாம் என்று கூறி அழைத்தனர். ஆனால், ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறிய எஸ்.பி., தன் தலையில் ரத்தம் வழிந்த இடத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தியபடியே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். விபத்தில் இறந்த பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டு, போக்குவரத்து சீரடைந்த பிறகே, தன் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. போராட்டக் களத்தில் காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கடமை உணர்வுடன் அவர் பணியாற்றியதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.