செய்திகள்

ஆட்சியை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும்: கனகராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

ஆட்சியை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கனகராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சி சரியில்லை. இந்த ஆட்சியை யார் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வர் பதவி வாங்கி உள்ளார். இதே போல மாபா பாண்டிய ராஜனுக்கும் பதவி வாங்கிக் கொண்டார். இவர்களால் கோவையை சேர்ந்த பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. போன்ற பல மாவட்ட செயலாளர்கள் பதவியை இழந்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு காரணமே இந்த ஓ.பன்னீர்செல்வம் தான். அவரை மீண்டும் இணைப்பதற்கு எந்த எம்.எல்.ஏ.க்களின் கருத்தையும் கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மரியாதை போய் விட்டது. பதவிக்காகத் தான் இதையெல்லாம் அவர் செய்கிறார். நிர்வாகிகளை அழைத்து இதுவரை அவர் எந்த கூட்டமும் போடவில்லை.

எடப்பாடி அணியினர் சிறிது நாட்களுக்கு முன்பு வரை ஓ.பன்னீர்செல்வம் மோசம் என்றார்கள். நாங்களும் அவரது அணியை சேர்ந்தவர்களுடன் சண்டை போட்டு பிரிந்து விட்டோம். இன்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே மாலைக்குள் நின்று கொண்டு சிரிக்கிறார்கள். எனவே இவர்கள் இருவரையும் நம்ப முடியவில்லை.

இன்று எடப்பாடி பழனிசாமி தினகரனை மோசம் என்கிறார். நாளையே இவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?என்னை பொருத்தவரை இருவரும் வேண்டாம். ஆனால் ஆட்சி இருக்க வேண்டும்.

சசிகலாவை ஒரு நாள் கடவுள் என்கின்றனர். மறு நாள் அவரை முடக்க வேண்டும் என்கின்றனர். டி.டி.வி. தினகரன் மதுரையில் கூடிய கூட்டம் காசு கொடுத்து கூடியது. இரட்டை இலையை முடக்கிய ஓ.பன்னீர் செல்வத்தை விட தினகரன் மோசமானவர் இல்லை. தினகரன் அணி சார்பில் என்னையும் அவர்களது அணிக்கு அழைத்தனர். ஆனால் நான் செல்ல வில்லை. அதே நேரம் இந்த ஆட்சியை காப்பாற்றியதில் அவரிடம் உள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அவர்கள் தற்போது சொல்வதிலும் நியாயம் உள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் 10 எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்ற போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைத்தீர்கள். அதேபோல தினகரனுடனும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அவர் அணியை சேர்ந்தவர்களுக்கும் மந்திரி பதவிகள் கொடுக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினரான என்னாலேயே ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது மக்களால் எப்படி முடிவு எடுக்க முடியும். அணிகள் ஒன்று சேர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் யார் நல்லவர் என்று எனக்கு தெரியவில்லை. நாஞ்சில் சம்பத் முதலில் காரை ஒப்படைத்தார். பின்னர் திரும்ப வாங்கிக் கொண்டார். தினகரன் அணியில் உள்ளவர்களுக்கும் பதவிகளை கொடுத்தால் நாளையே ஓடி வந்து விடுவார்கள்.தற்போது அமைச்சர்கள் பலரும் 2, 3 துறைகளை கைகளில் வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுத்தாலே பிரச்சினையை சமாளிக்கலாம். நான் யாருடைய அணியிலும் இல்லை. நடுநிலைமை வாதியாக இருக்கிறேன். வருகிற 28-ந் தேதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விடலாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

திவாகரனும் தன்னிடம் ஒரு அணி இருப்பதாக கூறுகிறார். தற்போது கட்சி யாருடைய கன்ட்ரோலில் உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் சரி என்ற நிலை தான் உள்ளது. பதவிசண்டை தான் நடக்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஓ.பி.எஸ்.

தற்போது உள்ள ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் யார் நல்லவர்கள் என்று தெரியும். தமிழக ஆளுநரை மத்திய அரசு நியமித்துள்ளது. எனவே அவர் மத்திய அரசு சொல்வதை தான் செய்வார்.

தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.