செய்திகள்

கவர்னர் ஆய்வில் எந்த தவறும் இல்லை: கனகராஜ் எம்.எல்.ஏ

கவர்னர் பன்வாரிலால் புரோகித் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை என சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் கூறினார்.

மாலை மலர்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை என சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

ஒரு கவர்மென்ட்டையே உருவாக்கக் கூடியவர் கவர்னர். அப்படிப்பட்டவர் அரசு அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்தியது நல்லது தான். ஆய்வின் போது தவறு இருப்பதாக அவர் கூறினால் அதை திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

ஆளுங்கட்சியை பற்றி குறை சொல்வது தான் எதிர்கட்சிகளின் வேலை. கவர்னர் யாரையும் பார்க்காமல் சென்று விட்டால் அதையும் குற்றம் சொல்வார்கள். கவர்னர் ரப்பர்ஸ்டாம்ப் போல செயல்படுகிறார் என்பார்கள். அவர் அதிகாரிகளை சந்தித்து பேசினால் அதையும் குறை கூறுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்று அவர் கேட்பதில் எந்த தவறும் கிடையாது.


கவர்னராக இருந்தாலும் அவரும் மத்திய அரசின் ஒரு அங்கம் தான். கவர்னருடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் மத்திய அரசின் திட்டங்கள் நமக்கு எளிதில் கிடைக்கும். வளர்ச்சி திட்டங்களை அதிகமாக செய்ய முடியும்.