செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக காங்கிரசுக்கு காமராஜர் சேர்த்த ரூ.1000 கோடி சொத்துக்கள் அபகரிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக காங்கிரசுக்கு காமராஜர் சேர்த்த ரூ.1000 கோடி சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு தனியார்கள் பிடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

காங்கிரசுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் காமராஜர் என்பது மாற்றுக் கட்சியினராலும் மறுக்க முடியாத உண்மை.

காமராஜர் காலத்துக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தலைநிமிரவே போராடி வருகிறது. தனது வாழ்வும், வளமும் காங்கிரஸ் என்று வாழ்ந்த காமராஜர் கட்சிக்காக தொண்டாற்றியது மட்டுமல்ல. கட்சிக்காக கோடிக்கணக்கான சொத்துக்களையும் சேர்த்து வைத்துள்ளார்.

காமராஜர் வாங்கிய சொத்து என்றதும் பலருக்கு நினைவுக்கு வருவது தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம்தான்.

நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், காமராஜர் அரங்கம் அவைகளின் மூலம் பல லட்சம் வருமானம் வர வேண்டும். ஆனால் கடைகள் அனைத்தையும் காங்கிரசின் முன்னணி நிர்வாகிகளே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மிக குறைந்த வாடகைதான். அதுவும் பல வருடங்களாக கொடுக்கப்படவில்லை. இதில் பலர் அந்த கடைகளை வாடகைக்கு விட்டே மாதம் பல ஆயிரம் பணம் பார்ப்பது தனிக்கதை.

சென்னையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களிலும் கட்சிக்காக காமராஜர் சொத்துக்கள் வாங்கி இருக்கிறார். அந்த சொத்துக்களை கண்டுபிடித்து மீட்பதற்காக வக்கீல் காந்தி, மாசிலாமணி, காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரை கொண்ட சொத்து மீட்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் மாவட்டம் வாரியாக சென்று காங்கிரஸ் சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளார்கள். கண்டு பிடிக்கப்பட்ட சொத்துக்களும், அவற்றை வாங்க காமராஜர் பட்ட பாடுகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போது அதில் கிடைக்கும் சிறு தொகையை வைத்து அந்த மாவட்டம் அல்லது நகரத்தில் காங்கிரஸ் கட்சி பெயருக்கு சொத்துக்களை வாங்கி இருக்கிறார்.

இந்த சொத்துக்கள் அனைத்துமே மாவட்டங்களின் மைய பகுதிகளில்தான் உள்ளன.

இன்றைய மதிப்பில் ஒவ்வொரு சொத்தும் குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை விலைபோகும்.

வேலூர், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சேலம், ஆத்தூர், திருச்சி, நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், கோவை, ஊட்டி, கொடைக்கானல், தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், ஆரணி, தருமபுரி, கிருஷ்ணகிரி, பழனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, காவேரிபட்டினம் உள்பட பல இடங்களில் கிடக்கின்றன.

சென்னையிலும் தேனாம்பேட்டை தவிர திருவொற்றியூர், எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி அருகில் ஆகிய இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன.

காவேரிபட்டினத்தில் 75 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் சுதந்திர போராட்ட காலத்தில் காந்தி பொதுக் கூட்டத்தில் பேசிய இடமாம்.

காமராஜர் பொதுக்கூட்டம் பேச சென்று இருக்கிறார். அன்றைய கூட்டத்தில் 27 ரூபாய் மிஞ்சி இருக்கிறது. கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அந்த இடத்தை பற்றி சொல்லி, நம் தலைவர் காந்தி பேசிய இடம். அதை காங்கிரசுக்கு வாங்கியே தீர வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னர் அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் செல்வந்தர்களிடம் நன்கொடை வாங்கி அந்த இடத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

இந்த சொத்துக்களை தனியார்கள் அபகரித்து வைத்துள்ளார்கள். ஆனால் இந்த சொத்துக்களை மீட்பது எளிது. தனியார்கள் அனுபவிப்பது கடினம் என்று தெரிய வந்துள்ளது.

அதற்கு காரணம் காமராஜர் அந்த சொத்துக்களை அவ்வளவு அற்புதமாக எழுதி வைத்துள்ளார். எவரது பெயருக்கும் இந்த சொத்துக்கள் பதிவு செய்யப்படவில்லை. நகர அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு பாத்தியப்பட்டது என்றே பத்திரப்பதிவு செய்து வைத்துள்ளார்.

அவரது சுயநலமில்லாத செயல்பாடுகளை பார்த்து சொத்து மீட்பு குழுவினர் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சொத்துக்களை மீட்பதற்கான அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.