செய்திகள்

கமல் சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுகிறார்: எஸ்.வி.சேகர்

கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறான வார்த்தை எனவும் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுகிறார் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மாலை மலர்

நடிகர் எஸ்.வி.சேகர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

கமல் இவ்வளவு நாளாக பொதுப்பிரச்சினைகளுக்கு கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது குழப்பமாக பேசுகிறார். மூன்றாந்தர அரசியலில் ஈடுபடுபவர் போல் நடந்து கொள்கிறார். கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி கேட்டு அதற்கு கமல் பதில் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. இந்து தீவிரவாதம் என்ற தவறான கற்பித்தல் அவருக்கு இருக்கிறது.

ஹாசன் என்று பெயர் இருப்பதால் இந்துக்களுக்கு எதிரான மனோபாவம் அவருக்கு இருக்கிறதா? என தெரியவில்லை. 89 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கேரளாவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலையை யார் செய்தாலும் குற்றமே. இதில் இந்து தீவிரவாதம் என்பது தவறான வார்த்தை பிரயோகம்.

நியூயார்க்கில் டிரக் ஏற்றி 8 பேரை கொலை செய்தவர் இந்து தீவிரவாதியா? விஸ்வரூபம் படம் வெளியான போது ஏற்பட்ட பிரச்சினையால் இந்தியாவை விட்டுப்போகிறேன் என்று கூறினாரே.

அந்த பிரச்சினை இந்து தீவிரவாதிகளால் ஏற்பட்டதா? சராசரி அரசியல்வாதி போல கமல் நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது.

கமலை வெளியில் இருந்து பார்த்தபோது அறிவாளியாகத்தான் தெரிந்தது. ஆனால் அடிக்கடி பேசும் போது அவரின் உண்மை முகம் வெளிப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கேரளாவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு தமிழகம் தாழ்ந்து விடவில்லை. கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் கேரளாவில் போய் வாழட்டும்.

சிலருக்கு சிறு வயதில் இருந்தே சில வி‌ஷயங்கள் பிடிபடாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அவை தவறாகாது. இந்து மதம் என்பது வாழ்க்கை முறை. காலையில் எழு. பல் துலக்கு. சாமியை வணங்கு, பெரியோருக்கு மரியாதை செலுத்து, பெரியவர்களுக்கு வணக்கம் சொல்வது ஆகியவற்றை கற்பிப்பது இந்து மதம்.

ஒழுக்கமான வாழ்க்கை, குடும்பம், வீடு என்பது நமது நடைமுறை. ஆனால் அந்த முறையே வேண்டாம். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருப்பது இந்து மதம். அதில் இருந்துதான் மற்ற மதங்கள் தோன்றின. மின்சார பெட்டியில் கை வைப்பது போல கமல் தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்து மதத்தை எதிர்ப்பது சினிமாவில் வரும் ஸ்டண்ட் அல்ல என்பதை கமல் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுங்கள். அதில் தவறில்லை. ஆனால் பெரும்பான்மையினருக்கு எதிராக பேசுவது காங்கிரஸ் காலத்திலேயே முடிந்து விட்டது. அதை இந்த அரசில் மேற்கொள்வது தவறான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அகிம்சையை கையாளும் மதமே இந்து மதம். அவர் புரிகிற மாதிரி பேசும் போது தான் குழப்பம் உண்டாகிறது. அவர் புரியாமல் பேசும் வரை பிரச்சினை எதுவும் இல்லை.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்றால் வந்து விட வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவது சினிமாவில் மட்டும்தான் நடக்கும்.

முகத்துவாரம் சென்று நேரில் பார்வையிட்ட அவர் வேலை நடக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்திருக்க வேண்டியதுதானே. அவர் ஏன் அதை செய்யவில்லை.