செய்திகள்

கமல் ஹாசனின் கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது: மதுரையில் ஆதரவாளர்கள் திரண்டனர்

நடிகர் கமல் ஹாசனின் கட்சி அறிவிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர். #KamalsPoliticalEntry

மாலை மலர்

மதுரை:

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கப்போவதாகவும், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். அதன்படி இன்று ராமேஸ்வரம் சென்ற அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கமலை உற்சாகமாக வரவேற்றனர். 

இரவு 7.15 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்தை வந்தடைந்தார் கமல். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் வரவேற்று தனது காரில் அழைத்து வந்தார். அதன்பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கியது. 

இக்கூட்டத்தில் இயக்குனர்  ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிக்கும் கமல், தனது கட்சியின் கொள்கைகளையும் விளக்கி பேசுகிறார். #tamilnews #KamalsPoliticalEntry