இந்தியாவில் இந்து தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. உத்தரபிரதேசத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில பகுதிகளில் அவர் மீதுவழக்கு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனை சுட்டுக் கொல்லவேண்டும் என்று இந்து அமைப்பு ஒன்று கூறியது.
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜனநாயக இந்தியாவில் கருத்து சுதந்திர உரிமையை பறிக்கும் முயற்சியில் சில மதவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
உண்மையை உலகுக்கு சுட்டிக்காட்டிய கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை ஜெயிலில் அடைக்கவேண்டும்.
மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே, தாபோல்கர், கல் புர்க்கி, கவுரிலங்கேஷ் ஆகியோருக்கு இந்தியாவில் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அந்த பட்டியலில் மேலும் சிலரது பெயர்களை சேர்க்க முயற்சி நடக்கிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
மதவாதத்திற்கு எதிராக மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஓரணியில் இணைய வேண்டும். மதத்தின் பெயரில் மக்களிடையே பிரிவினையை தூண்ட முயல்கின்றனர். அந்த தீய சக்திகளை எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்ககூடாது.
கமல்ஹாசனுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் மதச்சார்பின்மைக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல் ஆகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.