செய்திகள்

கமல்ஹாசன் புதிய கட்சி நாளை தொடக்கம் - முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

கமல்ஹாசன் புதிய கட்சி தொடக்க விழாவில் நாளை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் பங்கேற்கிறார்கள். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry

நாளை புதிய கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நடிகர்கள் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தனது அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்து அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை பெற்றுவரும் நிலையில், கமல்ஹாசன் தனது அரசியல் அரங்கேற்றத்தை தொடங்கி விட்டார்.

கடந்த மாதமே அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்தார்.

அதன்படி நாளை (21-ந்தேதி) புதிய அரசியல் கட்சி தொடங்கும் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

புதிய கட்சி தொடக்க விழாவுக்காக கமல்ஹாசன் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் ரசிகர் மன்ற மாநில தலைவர் தங்கவேலு, மதுரை மாவட்ட தலைவர் அழகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரண்டதால் விமான நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதியது.

விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு கமல்ஹாசன் வந்தார். அங்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை நடைபெறும் கட்சி தொடக்க விழா மற்றும் கொடி வடிவமைப்பு, கட்டியின் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாலை 5 மணி அளவில் காரில் ராமேசுவரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு தனுஷ்கோடி ரோட் டில் உள்ள ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (புதன்கிழமை) காலை 7.45 மணிக்கு தனது அரசியல் சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்துக்கு செல்லும் கமல்ஹாசன் அப்துல்கலாமின் சகோதரர் மற்றும் குடும்பத்தை சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். காலை 9 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று கமல்ஹாசன் அஞ்சலி செலுத்துகிறார்.

கமல்ஹாசனின் அரசியல் பயண தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் ராமேசுவரத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.

அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை புறப்படும் கமல்ஹாசனுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 12.30 மணி அளவில் ராமநாதபுரம் நுழைவு வாயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.

ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் அவர் பிற்பகல் 2.30 மணி அளவில் அவரது சொந்த ஊரான பரமக்குடி வருகிறார். அங்கு 50 இரு சக்கர வாகனங்கள், 30 கார்களில் வரும் ரசிகர்கள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்ததும் ஐந்துமுனை சாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.

பின்னர் மானாமதுரை வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். அனைத்து பொதுக்கூட்டங்களிலும் தனது அரசியல் சுற்றுப் பயணத்தை விளக்கி பேசுகிறார்.

மாலை 5 மணிக்கு மதுரை வரும் கமல்ஹாசன் ஒத்தக்கடை மைதானத்தில் கட்சியின் பெயர் - கொடியை அறிமுகம் செய்து வைத்து கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுகிறார். இதற்காக ஒத்தக்கடை மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் பங்கேற்கிறார்கள். கமல் ஹாசன் வருகையையொட்டி மதுரையில் அவரை வரவேற்று நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் மைதானத்திலும் அலங்கார தோரணங்கள் மற்றும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. #KamalHaasan #KamalHaasanPoliticalEntry #tamilnews