கல்யாண் சிங்கின் சிதைக்கு தீ மூட்டிய மகன் 
செய்திகள்

கங்கை நதிக்கரையில் இறுதிச்சடங்கு- கல்யாண் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

இறுதிச்சடங்கில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாலை மலர்

புலந்த்சாகர்:

பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் (வயது 89) நேற்று முன்தினம் லக்னோவில் காலமானார். லக்னோ மற்றும் அலிகார் ஆகிய இடங்களில் அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

இன்று காலை கல்யாண் சிங்கின் உடல் அலிகாரில் இருந்து அவரது சொந்த கிராமமான மதோலி அருகில் உள்ள அட்ராலி நகருக்கு கொண்டு வரப்பட்டு, விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

அதன்பின்னர் மாலையில் புலந்த்சாகர் மாவட்டம் நரோரா நகரில் உள்ள கங்கை நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு, கல்யாண் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் முழு அரசு மரியாதையுடன் கல்யாண் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் ரஜ்வீர் சிங் தீமூட்டினார்.