இறந்த கல்பனா யானைக்கு அஞ்சலி செலுத்திய வனத்துறையினர் 
செய்திகள்

உடல் நலக்குறைவால் வளர்ப்பு யானை கல்பனா இறந்தது- வனத்துறையினர் மலர்தூவி அஞ்சலி

டாப்சிலிப்பில் உடல்நலக்குறைவு காரணமாக வளர்ப்பு யானை கல்பனா பரிதாபமாக இறந்தது. இதையடுத்து வனத்துறையினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

பொள்ளாச்சி:

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே கோழிமுத்தி, வரகளியாறில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கலீம், கல்பனா, கபில்தேவ் உள்பட 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கல்னா என்கிற பெண் யானை கடந்த 2 மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று பெண் யானை பரிதாபமாக இறந்தது. இறந்த யானையின் உடலை பார்த்து பாகன் பழனிசாமி கதறி அழுதார். பின்னர் வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பாகன்கள் யானையின் உடலுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் தோட்டங்களுக்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஒரு பெண் யானையை பிடித்து டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த யானைக்கு கல்பனா சாவ்லாவின் பெயர் அந்த யானைக்கு வைக்கப்பட்டது. முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு, வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டது.

யானை சவாரிக்கு கல்பான யானை பயன்படுத்தப்பட்டது. தற்போது யானைக்கு 41 வயது ஆன நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து யானைக்கு எந்த பயிற்சியும், வேலையும் கொடுக்காமல் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது யானை இறந்து விட்டது. யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.