பெண் தீக்குளித்து தற்கொலை 
செய்திகள்

கல்லிடைக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை

கல்லிடைக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஊர்க்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி பழனியம்மாள்(வயது 30). முத்துராமலிங்கம் கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் பழனியம்மாள் தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான ஊர்க்காட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் பழனியம்மாள் ஒரு தனியார் மகளிர் குழுவில் கடன் வாங்கியுள்ளார். அதனை கொடுப்பதற்காக அவர் பல்வேறு இடங்களில் கடன் கேட்டுள்ளார். ஆனால் அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடந்த 25-ந்தேதி மகளிர் குழுவில் கடன் வசூலிப்பவர்கள் வந்து பணத்தை கேட்டுள்ளனர். இதையடுத்து பழனியம்மாள் கேரளாவில் உள்ள தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். இதற்கு அவரது கணவர், பழனியம்மாளை திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த பழனியம்மாள் வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பழனியம்மாளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.