தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள கொடார் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மனைவி தெய்வாணை(வயது 37). மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குப்புசாமியின் தம்பி கிருஷ்ணன் கோழிப்பண்ணை வைப்பதற்காக ரூ.50 ஆயிரம் பணம் கடனாக தரும்படியும், பின்னர் அந்த பணத்தை தான் வட்டியுடன் சேர்த்து விரைவில் தந்து விடுவதாகவும் கூறி தெய்வாணையிடன் கேட்டார்.
இதையடுத்து தெய்வாணை மகளிர் சுய உதவி குழுவில் இருந்து ரூ.50 ஆயிரம் பணம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கிருஷ்ணனிடம் கொடுத்தார்.பணத்தை வாங்கிய அவர் பின்னர் அந்த பணத்தை கட்டவில்லை.
பணத்தை கட்டாததால் கடன் வாங்கி கொடுத்த தெய்வாணைக்கு மகளிர் குழுவில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தான் கொடுத்த ரூ.50 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மகள் சுமித்திராவை வீட்டில் இருக்க வைத்து விட்டு தெய்வாணை ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். பின்னர் அங்கு அவர் அடித்து வாயில் ஒரு பாட்டில் பூச்சிக் கொல்லி மருந்து ஊற்றப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவருடைய கால்களில் பலத்த காயங்கள் இருந்தன.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தெய்வாணையை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவலை அறிந்ததும் கிருஷ்ணன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.