விபத்து பலி 
செய்திகள்

கள்ளப்பெரம்பூரில் டிராக்டர் நகர்ந்து சிறுவன் பலி

கள்ளப்பெரம்பூரில் டிராக்டர் நகர்ந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வல்லம்:

அரியலூர் மாவட்டம் வாரனாசி பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரின் மகன் தரணிதரன் (வயது 16). ரகுபதி இறந்து விட்டார்.

தரணி தரன் அரியலூரில் உள்ள தனியார் டுட்டோரியல் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவன் தரணிதரன் தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரம்பூரில் உள்ள அவருடைய தாத்தா ராமலிங்கம் என்பவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். தரணிதரனின் தாத்தாவுக்கு சொந்தமான டிராக்டர் உள்ளது. தற்போது அந்த டிராக்டரை வைக்கோல் கட்டும் எந்திரத்தை இணைத்து வயல்களில் வைக்கோல் கட்டும் பணிக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கள்ளப்பெரம்பூரில் வீட்டில் நிறுத்தி இருந்த டிராக்டரை சிறுவன் தரணிதரன் சாவி போட்டு இயக்கி உள்ளார். பின்னர் கியரில் டிராக்டரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அடியில் சிக்கி இருந்த வைக்கோலை அகற்றி கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் தானாகவே நகர்த்துள்ளது.

டிராக்டரில் கீழே இருந்த சிறுவன் சற்று தூரம் இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.

இதில் படுகாயமடைந்த தரணிதரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.