கள்ளழகர் இறங்கும் வைகை ஆறு வறண்டு கிடப்பதை படத்தில் காணலாம் 
செய்திகள்

அழகர் ஆற்றில் இறங்க வைகையில் தண்ணீர் இல்லை: தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

வைகை அணை வறண்டதால் சித்திரை திருவிழாவுக்கு ஆற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு சில நாட்களே இருப்பதால் ஆற்றில் உள்ள தொட்டியை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

மாலை மலர்

மதுரை:

மதுரையில் ஆண்டுதோறும் சித்திரையில் முத்திரை பதிக்கும் விதமாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. அப்போது மதுரையே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர் மட்டமும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது.

இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையிலும் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. அதுவும் அப்படியே தமிழக பகுதிக்கு திறந்து விடப்பட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கள்ளழகர் இறங்கும் இடமான மதுரை ஏ.வி. பாலம் ஆற்றங்கரையோரத்தில் தொட்டி அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி கள்ளழகர் இறங்குவார்.

கடந்த சில ஆண்டுகளாக சரியாக பருவ மழை பெய்யாததால் வைகை ஆற்றில் நீர்வரத்து என்பதே கேள்விக்குறியாகி விட்டது. கடந்த வருடம்கூட தண்ணீரில்லாமல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்த ஆண்டும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு சில நாட்களே இருப்பதால் ஆற்றில் உள்ள தொட்டியை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதன்பின் விழா அன்று லாரிகள் மூலம் அதில் நீர் நிரப்பப்பட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள். 6 நாட்களில் மழை பெய்து வைகை ஆற்றில் தண்ணீர் வர வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.