வீடு புகுந்து கொள்ளை 
செய்திகள்

களியக்காவிளை அருகே மின்வாரிய என்ஜினீயர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

களியக்காவிளை அருகே மின்வாரிய என்ஜினீயர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

களியக்காவிளை அருகே நரியான் விளையைச் சேர்ந்தவர் முருகன், (வயது 53).

இவர், மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பபாய், (52). முருகன் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முருகன் ஊருக்கு வந்திருந்தார்.

கிறிஸ்துமஸ் அன்று பக்கத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்றார். இரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 5 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து முருகன் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. போலீசார் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையன் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி கருவியை தூக்கிச் சென்றிருந்தான்.

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.