கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதையொட்டி கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி. 
செய்திகள்

24 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மாலை மலர்

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் 17-ம் நூற்றாண்டில் கெட்டி முதலி மன்னர்களால் கட்டப்பட்டது. அற்புத சிற்ப கலைக்கு ஒப்பற்ற சான்றாக விளங்குவதால் தமிழகத்தின் கலை களஞ்சியங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த கோவில் கோபுரம் 90 அடி உயரத்தில் 5 அடுக்குகளை கொண்டு கம்பீரமாக உள்ளது. கோவிலுக்குள் நுழைந்து வந்த வழியை திரும்பி பார்த்தால் ஒரு பெரிய தேரை குதிரைகளும், யானைகளும் இழுத்து வருவது போன்ற காட்சி பிரமிப்பு அடைய செய்கிறது.

மூலவருக்கு முன்புறமுள்ள மேற்கூரையில் 7 அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில் விரிந்த 8 தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டு, அதை வாலால் ஒட்டிபிடித்தபிடி கிளிகள் தொங்கிக் கொண்டிருப்பதும், தண்டின் மீதுள்ள கல் வளையத்தை தன் அலகால் கவ்வி கொண்டிருப்பதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதே போல், வைகாசி மாதத்தில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது ஊடுருவி வழிபடுவதும், அபூர்வம்.

இக்கோவிலில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது கோவில் திருப்பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ராஜகோபுரம், விமானங்கள், சாமி சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் 3 முறை கோவிலை சுற்றி வலம் வந்து மலர்கள் தூவியது.

விழாவில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இவ்விழாவில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், எம்.பி.க்கள் வி.பன்னீர் செல்வம், பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம் (சேலம் மேற்கு), எஸ்.ராஜா(சங்ககிரி), எஸ்.வெற்றிவேல்(ஓமலூர்), அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா, ஆணையாளர் ஆர்.ஜெயா, செயல் அலுவலர் கலைச்செல்வி, தக்கார் மற்றும் செயல் அலுவலர் ராஜா மற்றும் அதிகாரிகள், பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு கைலாசநாதர் உடனுறை சிவகாம சுந்தரி உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனை தொடர்ந்து சாமி ஊர்வலம், வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி நெரிசல் ஏதும் ஏற்பட்டு விடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தாரமங்கலம் வழியாக சங்ககிரி, ஜலகண்டாபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. சேலத்தில் இருந்து தாரமங்கலம் வழியாக ஜலகண்டாபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தொட்டம்பட்டி வழியாக இயக்கப்பட்டது.

ஓமலூரில் இருந்து செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பெருமாள் கோவில் மேடு, கே.ஆர்.தோப்பூர், தொட்டப்பட்டி வழியாக மாற்றி விடப்பட்டது. ஜலகண்டாபுரத்தில் இருந்து ஓமலூர் வரும் வாகனங்கள் அனைத்தும் ஆளுர்பட்டி ஏரி, பைபூர், தொளசம்பட்டி, எம்.செட்டிப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டது. தாரமங்கலம் நகரின் 3 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு வாகனங்கள் இயக்கப்பட்டது.