செய்திகள்

கடப்பாக்கம் அருகே மீனவர் வெட்டிக்கொலை

கடப்பாக்கம் அருகே மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மதுராந்தகம்:

கடப்பாக்கம் அருகே உள்ள ஆலம்பறை குப்பத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 33). மீனவர். நேற்று இரவு அவர் கடப்பாக்கம் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே வந்த போது 10 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தேசிங்கு பரிதாபமாக இறந்தார்.

சூனாம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சினிமா சூட்டிங்கிற்கு வருபவர்கள் கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆலம்பறை குப்பம், கடப்பாக்கம் குப்பம், ஆலம்பறை கோட்டையில் சினிமா சூட்டிங்கிற்கு வந்தவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.

இந்த பணத்தை பிரிப்பதில் மீனவ கிராமங்களிடையே மோதல் ஏற்பட்டது. எனவே இந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த முன் விரோதத்தில் தேசிங்கை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மீனவர் கொலையால் ஆலம்பறை குப்பம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.