செய்திகள்

டி.என்.பி.எல்.: திருவள்ளூர் வீரன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் திருவள்ளுர் வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

மாலை மலர்

திண்டுக்கல்:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் திருவள்ளுர் வீரன்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற திருவள்ளூர் விரன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சதுர்வேத் மற்றும் சித்தார்த் களமிறங்கினர். சித்தார்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் பாபா அப்ரஜித்துடன் ஜோடி சேர்ந்த சதுர்வேத் ரன்குவிப்பில் இறங்கினர்.

சதுர்வேத் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்தவர்கள் ரன் எடுக்க தடுமாறினர். கேப்டன் அப்ரஜித் 39 ரன்களில் ராஜ்குமார் பந்தில் போல்டானார். இறுதியாக ரங்கராஜன் 10 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதன்மூலம் திருவள்ளூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிர்கு 167 ரன்கள் எடுத்தது. 

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் களமிறங்கினர். விஷால் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஞ்சய் யாதவ் பந்துவீச்சில் ரங்கராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் பத்ரிநாத் 11 ரன்னில் அவுடாகி ஏமாற்றம் அளித்தார். 

பின்னர் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ஷாஜகான் சிறப்பாக விளையாடினார். ஷாஜகான் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சந்திரசேகர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தபோதிலும், இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய ஸ்ரீகாந்த், 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார். இதில் 2 நான்கு ரன்களும் 6 ஆறு ரன்களும் அடங்கும். 

7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய காரைக்குடி காளை அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனிருதா ஸ்ரீகாந்த் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இன்று நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் விளையாட உள்ளன.