புதுடெல்லி:
இந்தியாவின் நீதித்துறை செயல்பாட்டின் முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னாள் தலைமை நீதிபதி பி.என். பக்வதி. இவர் கடந்த வியாழனன்று டெல்லியில் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பக்வதி டெல்லியில் உயிரிழந்தார். இதையடுத்து பக்வதியின் இறுதிச் சடங்கு டெல்லியில் உள்ள லோதி சாலையில் உள்ள மின்மயானத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
பக்வதியின் இறுதிச் சடங்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மூத்த வழக்கறிஞர் சோலி சொரப்ஜி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உள்ளிட்டோரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்.
நீதித்துறையில் பொது நல வழக்கினை அறிமுகப்படுத்திய பக்வதி, நீதித்துறை செயல்பாட்டின் முன்னோடி என்று அழைக்கப்பட்டார். 95 வயதாகும் பக்வதிக்கு பிரபாவதி பக்வதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
இந்தியாவின் 17-வது தலைமை நீதிபதியான பக்வதி, உச்சநீதிமன்றத்தில் ஜுலை 1985 முதல் டிசம்பர் 1986 வரை நீதிபதி பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த 1973 ஜுலையில் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.