ஆக்லாந்து:
நியூசிலாந்தில் நடந்த ஜுனியர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற பின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
‘நமது அணி வீரர்கள் களத்தில் எடுத்த முயற்சிகளை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். மறக்க முடியாத இந்த வெற்றி, வீரர்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இந்த ஒரு நினைவுகளுடன் அவர்கள் (வீரர்கள்) ஓய்ந்து விடமாட்டார்கள். வருங்காலத்தில் இன்னும் நிறைய மறக்க முடியாத நினைவுகளை (வெற்றிகள்) கொண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்த இளம் அணியை உருவாக்க நிறைய கவனம் செலுத்தினோம். இதில் 7-8 உதவியாளர்கள் பெரும் பங்கு வகித்தனர். அவர்கள், வீரர்களுடன் கடந்த 14 மாதங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் அற்புதமானது. அந்த பயிற்சி குழுவில் நானும் ஒருவராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். எங்களை பொறுத்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்களுக்கு எல்லா வகையிலும் ஊக்கமளித்தோம். அவர்கள் களத்தில் அதனை கச்சிதமாக செய்து முடித்தனர்’ என்றார்.
இந்திய அணியின் கேப்டனான மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா கூறுகையில், ‘தற்போது எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு சந்தோஷத்தில் திளைக்கிறேன். இந்த வெற்றியின் அனைத்து புகழும் அணியின் உதவியாளர்களையே சாரும். குறிப்பாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மகத்தானது. அத்துடன் வீரர்களின் சிறப்பான பங்களிப்பையும் பாராட்டி ஆக வேண்டும். இறுதிப்போட்டியில் மன்ஜோத் கல்ரா அடித்த சதம் மிகவும் முக்கியமானது. இதே போல் தொடர் முழுவதும் சுப்மான் கில்லின் பேட்டிங் சூப்பராக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி பந்து வீச்சும் நன்றாக அமைந்தது’ என்றார்.