செய்திகள்

தலைமை பதிவாளர், நிர்வாக பதிவாளர் ஐகோர்ட்டு வளாகம் முழுவதையும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும்: நீதிபதிகள்

தலைமை பதிவாளர், நிர்வாக பதிவாளர் ஆகியோர் உயர்நீதிமன்ற வளாகம் முழுவதையும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் என்.ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு வளாகத்துக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். பல துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால், இந்த ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் அசுத்தம் நிறைந்துள்ளது. குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. திடக்கழிவு மேலாண்மை விதிகள் இங்கு முறையாக அமல்படுத்தப்படவில்லை. துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளன.

மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு வரும் போது, அவர்கள் சக்கர நாற்காலிகள் வசதிகள் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ‘லிப்ட்’ வசதிகளும் அவர்களுக்கு இல்லை.

உணவுக்கழிவுகள், காகித கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் வளாகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. மழைநீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால், மழை பெய்யும்போது, மழைநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. முறையான வாகன நிறுத்தங்கள் இல்லை. இதனால், வளாகத்தில் வாகன நெரிசல்கள் ஏற்படுகிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் வளாகத்துக்குள் எளிதில் வந்து செல்ல முடிவதில்லை. இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, கடந்த ஆண்டு நவம்பர் 3ந் தேதி ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் புகார் மனு கொடுத்தேன். எனவே, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ஐகோர்ட்டு வளாகத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பது குறித்து புகைப்படங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில், ஐகோர்ட்டில் உள்ள அனைத்து வக்கீல் சங்கங்கள், குமஸ்தா சங்கங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். தலைமை நீதிபதியின் தனி செயலாளர், ஐகோர்ட்டு வளாகம் முழுவதையும் ஆய்வு செய்து, குப்பைகள் தேங்கிக் கிடக்கும் இடங்களை புகைப்படம் எடுத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கிடையில், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர், நிர்வாகப்பிரிவு பதிவாளர் ஆகியோர் ஐகோர்ட்டு வளாகம் முழுவதையும், தினமும் காலையிலும், மாலையிலும் ஆய்வுகள் செய்து, அனைத்து பகுதிகளும் சுத்தமாக உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் வருகிற 11-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.