சென்னை:
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஆர்.கே.நகரில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாக வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கிற்கு பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விட்டதாக பதில் மனு தாக்கல் செய்ததால், என் வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.
ஆனால், இன்னமும் 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள், ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். எனவே, போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும். பொய் தகவலை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள் இருப்பதாக மனுதாரர் கூறுவது தவறு.
வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது 1947 இரட்டை பதிவு வாக்காளர்கள் பெயர் இருந்தன. தற்போது தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால், வாக்காளர்கள் பட்டியலை சரி செய்ய முடியாது.
அதேநேரம், வீடு மாறியவர்கள், இரட்டை பதிவுகள் ஆகிய வாக்காளர்கள் குறித்து அனைத்து பூத் ஏஜெண்டுகளுக்கும் தெரிவித்து, அதுபோன்ற நபர்கள் கள்ள ஓட்டு போடாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.