திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் இதழ் வாசித்தலில் உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னிலை வகித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் 7½ கோடி மக்கள் இருக்கிறார்கள், அதில் 500 பேர் ஒழுங்காக இருந்தால் போதும். 50 அமைச்சர்கள், 75 உயர் நீதிமன்ற நீதிபதிகள், 32 மாவட்ட நீதிபதிகள், 32 மாவட்ட கலெக்டர்கள் என உயர் அதிகாரிகள் ஒழுங்காக இருந்தால் தமிழகம் தலை சிறந்து இருக்கும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அறிஞர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் வளர்ச்சிக்காக செயல்பட்டால், உலக அளவில் தமிழகம் தலை சிறந்து நிற்கும்.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் உள்ளது, கடினமாகவும் உள்ளது.
தமிழ் வாசித்தல் தமிழகத்தில் தமிழ் தான் படிக்கிறோம். இதில் தமிழ் வாசிப்பது என்பது என்ன இருக்கிறது.
ஆசிரியர்கள் சரியாக நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு சரியாக சொல்லி தர வேண்டும். அப்போது எல்லா ஆசிரியர்களுக்கும் ரூ.150 தொகுப்பு ஊதியம் வழங்கினார்கள்.
ஆனால் தற்போது 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி எவ்வளவு சம்பளம் வழங்குகிறார்கள் என்பது தெரியும். உயர் நீதி மன்றத்தில் துப்புரவு பணிக்கு 200 பணிக்கு ஆள் சேர்க்கை அறிவித்து இருந்த போது 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்திற்கு முதுநிலை படிப்பு, பொறியியல் படிப்பு படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆசிரியர்கள் எல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் நீங்கள் எல்லாம் ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.
இதை ஏன் கூறுகின்றேன் என்றால் உங்கள் மனதை புண்படுத்தஅல்ல. உங்களை விட படிப்பு தகுதி அதிகம் உள்ளவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியபடுத்துகின்றேன்.
உங்களுக்கு அருமையான வேலை கிடைத்து இருக்கிறது. ஆதலால் ஆசிரியர்கள் சிறப்பாக செயல் ஆற்ற வேண்டும். இல்லை என்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவார்கள்.
பெற்றோர்கள் சிறப்பாக இருந்தால் தான் மாணவர்கள் சிறப்பாக இருப்பார்கள். மாணவர்கள் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது. ஏசு பிறப்பிற்கு முன்பு இந்தியாவில் 1 லட்சம் கல்வெட்டுகள் இருந்தன.
இதில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. தமிழகத்தில் தமிழ் அழிந்து வருகிறது. ஆனால் வெளி நாடுகளில் தமிழை கற்று கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews