செய்திகள்

நீதிபதி கர்ணன் 20 நாளாக தலைமறைவு பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

குற்றவாளிகள் எங்கு பதுங்கி இருந்தாலும் கைது செய்துவிடும் போலீசார் நீதிபதி கர்ணன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறுவது ஆச்சரியமாக உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கர்ணன்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு இடையே எழுந்த மோதல் இந்திய நீதித்துறையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்த நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு கூறியது.

சுப்ரீம் கோர்ட்டையும், நீதித்துறையையும் அவமதித்து இருப்பதாக கர்ணன் மீது குற்றம்சாட்டிய நீதிபதிகள் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்ததில் அதிருப்தி அடைவதாக குறிப்பிட்டனர்.

உடனடியாக கர்ணனை கைது செய்யும்படி மேற்கு வங்காள போலீஸ் டி.ஜ.பி.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து நீதிபதி கர்ணன் தலைமறைவானார். அவரை கைது செய்ய கொல்கத்தாவில் இருந்து போலீசார் சென்னை வந்தனர். தமிழக போலீசாரின் உதவியுடன் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.

குற்றவாளிகள் எங்கு பதுங்கி இருந்தாலும் கைது செய்துவிடும் போலீசார் நீதிபதி கர்ணன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் திணறுவது ஆச்சரியமாக உள்ளது.

கடந்த 9-ந்தேதி கைது உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது. 20 நாட்களாகியும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிய வில்லை.

இதற்கிடையில் நீதிபதி கர்ணன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ‘தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நீதித் துறைக்கு முரண்பாடானது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

ரவுடிகள், சமூக விரோதிகள்தான் போலீஸ் கையில் பிடிபடாமல் தண்ணி காட்டுவார்கள். ஆனால் பிரபலமான நீதிபதியே போலீஸ் கண்ணில் சிக்காமல் இருப்பது எப்படி? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.