செய்திகள்

நெல்லையில் போலீஸ் தாக்குதல் - சென்னையில் டி.ஜி.பி.யுடன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்ததை அடுத்து, சென்னையில் போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரனை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் சந்தித்தனர்.

மாலை மலர்

சென்னை:

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் பயங்கர சப்தத்துடன் புகை வந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட மூன்று செய்தியாளர்கள் மீது பணகுடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சுமார் 150 பத்திரிக்கையாளர்கள் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, சட்டைகளை கிழித்தனர். செல்போன்களை பறித்து கீழே போட்டு உடைத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே ராஜேந்திரனை பத்திரிக்கையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது, செய்தியாளர்கள் மீது கைது நடவடிக்கை எதுவும் இருக்காது எனவும், வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஏ.டி.ஜி.பி.யிடம் தெரிவிக்கலாம் என்று ராஜேந்திரன் கூறியுள்ளார்.