நெகமம்:
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஜோத்தம்பட்டியில் இருந்து ஆவலப்பம்பட்டி வரை தார்சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை ஜோத்தம்பட்டியில் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆவல்நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ், ஜோத்தம்பட்டி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை தாங்கி, தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சார்பில் ஆடு மற்றும் பசுமாடு வழங்கும் திட்டம் எல்லா மக்களையும் சென்றடையும் வகையில் விரிவு படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் உள்ள பேரூராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக வழங்கும் விலையில்லா ஆடுகள் திட்டம் வரும் காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரே கட்டமாக வழங்கப்படும்.
அதேபோல நாட்டுக்கோழி வளர்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் வரும் நிதியாண்டு முதல் ஏழை மக்களுக்கு ஆடு மற்றும் பசுமாடு வழங்குவதைப்போல நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அ.தி.மு.க.ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ஜோத்தம்பட்டியில் 20 பயணாளிகளுக்கு 4 ஆடுகள் வீதம் 80 ஆடுகளை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.