புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் சில பிரிவினைவாத அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவர்கள் காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி உள்பட பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த அமைப்புகளை மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக ஹூரியத் தலைவர் கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா, ஷாஹித் உல் இஸ்லாம், பரூக் அகமது, முகமது அக்பர் உள்ளிட்ட 10 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ஜம்மு-காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரஷீத் என்ற இன்ஜினீயர் ரஷீத்துக்கு கடந்த 28-ம் தேதி சம்மன் அனுப்பியது. அதில், தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு அக்டோபர் 3-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவர் விசாரணை தொடர்பான ஆவணங்களுடன் தேசிய புலனாய்வு முகமையில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.