ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றுவது தொடர்பான கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி மசோதாவை அமல்படுத்துவதால் வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள் எனக்கூறி கோஷம் எழுப்பினர்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் தேவேந்திர ரானா எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டார். அதைதொடர்ந்து சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்று காலை ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்துவதற்கான தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
அப்போது நிதி மந்திரியாக உள்ள ஹசீப் டிராபு எழுந்து நின்று, சபாநாயகர் கவிந்தர் குப்தாவிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தார்.
“தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏ. தேவேந்திர ரானா, சட்டசபையில் நடந்து கொண்ட விதம் அவை நடவடிக்கையை மீறிய செயல். எனவே, அடுத்த கூட்டத் தொடரில் அவர் சட்டசபைக்கு வந்ததும் எனக்கு வணக்கம் தெரிவிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
மேலும், ஜி.எஸ்.டி. பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சரூரியின் நிபந்தனை ஏற்கப்பட்டுள்ளதால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி சபாநாயகர் உத்தரவிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.