ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களின் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த தாக்குதல்களில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட இந்திய ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் கேப்டன் கபில் குண்டு, ராணுவ வீரர்கள் ராமவதார், சுபம் சிங், ரோஷன் லால் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்ட சபை இன்று கூடியது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் குறித்து தேசிய மாநாட்டக் கட்சி உறுப்பினர் ஒருவர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதுதொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கேள்வி நேரம் முடிந்ததும், பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
அதேசமயம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து, வீரர்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினர். 56 இஞ்ச் மார்பு எங்கே போனது? என்றும் கேட்டு பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.