செய்திகள்

அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி: 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு-6 பேர் காயம்

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய ராணுவ தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர்கள் படுகாயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இருக்கும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷேரா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி மோர்ட்டார் குண்டுகளால் தாக்கினர்.

மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி செக்டார் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக குண்டுகளால் இந்திய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பினரிடையே லேசான துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலுக்கு பிம்பெர் மற்றும் பட்டால் செக்டார் எல்லைப் பகுதியில் அந்நாட்டின் நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பதிலடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.