செய்திகள்

பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகல்

பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். #JitanRamManjhi

மாலை மலர்

பாட்னா:

பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

பீகாரில் கடந்த 2014-15-ம் ஆண்டுகளில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் முதல்-மந்திரியாக இருந்த ஜித்தன் ராம் மஞ்சி, பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி ‘இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து வந்தது.

தற்போது இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக மஞ்சி நேற்று அறிவித்தார். முன்னதாக லாலு பிரசாத்தின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, மற்றொரு மகனும் முன்னாள் மந்திரியுமான தேஜ்பிரதாப் உள்ளிட்டோர் மஞ்சியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் இணைந்த மெகா கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறினார். இது குறித்த முறையான அறிவிப்பையும், விலகலுக் கான காரணத்தையும் நாளை (இன்று) காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பீகாரில் விரைவில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில், தனது இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு இடமாவது வழங்க வேண்டும் என சமீபத்தில் மஞ்சி வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  #JitanRamManjhi #tamilnews