புதுடெல்லி:
இந்திய டெலிகாம் சந்தையில் 4ஜி வரவு மற்றும் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட அதிவேகமாக இருந்துள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோ மலிவு விலை 4ஜி டேட்டா மற்றும் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் வரவு உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனம் சார்ந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி - மார்ச் 2017 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதுவரவு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஐடியா செல்லுலார் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை பிடித்த நிறுவனங்கள் வழங்கிய டேட்டா வேகம் சார்ந்த தகவல்களும் டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகம் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 17.43 Mbps, 16.49 Mbps மற்றும் 18.49 Mbps வரை இருந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜியோவின் சராசரி வேகம் 17.47Mbps என்ற அளவில் இருந்துள்ளது. பாரதி ஏர்டெல் வேகம் 11.25Mbps, 10.44Mbps மற்றும் 9.14Mbps என்ற வேகத்தில் சராசரியாக 10.27Mbps வரை வழங்கியுள்ளது.
ஐடியா செல்லுலார் 11.06Mbps என்ற வேகத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிவேக டவுன்லோடு வழங்கிய நிறுவனங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஐடியா 4ஜி டவுன்லோடு வேகம் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 12.22Mbps, 12.09Mbps மற்றும் 8.89Mbps என்ற அளவு இருந்துள்ளது. டிராய் அறிக்கையின் படி 2017 மார்ச் வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அதிவேக டெலிகாம் ஆப்பரேட்டராக இருந்து வருகிறது.
மார்ச் மாத தகவலின் படி பாரதி ஏர்டெல் 9.14Mbps என்ற வேகத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடபோன் நிறுவனம் 9Mbps என்ற வேகத்தில் அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த ஐடியா நிறுவனம் 8.89Mbps என்ற வேகம் வழங்கி மார்ச் மாதத்தில் நான்காவது இடம் பிடித்துள்ளது.