செய்திகள்

டெல்லியில் ஜிக்னேஷ் மேவானி தடையை மீறி பேரணி - 2 ஆயிரம் போலீசார் குவிப்பு

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியின் பேரணிக்கு டெல்லி போலீசார் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி அவர் பேரணி செல்ல உள்ளதால் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #JigneshMevani

மாலை மலர்

புதுடெல்லி:

தலித் செயற்பாட்டாளரும் குஜராத் மாநிலம் வத்கம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவருமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லியில் உள்ள பாராளுமன்ற தெருவில் “சமூக நீதி பேரணி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.  

வலதுசாரிகளின் வன்முறை அதிகரித்துள்ளதை கண்டித்தும் வேலைவாய்ப்பை பெருக்க மத்திய அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டியும் இந்த பேரணியை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். இந்த பேரணியில் ஜிக்னேஷ் மேவானி மற்றும் அசாம் விவசாய தலைவர் அகில் கோகாய் ஆகியோர் கலந்து கொண்டு பேச இருந்தனர்.

ஜிக்னேஷ் மேவானி பங்கேற்க இருந்த பேரணிக்கு, போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், போலீஸ் தடையை மீறி பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள் அடங்கிய துப்பாக்கிகள், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி ஜந்தர் மந்தர் சாலையில், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்திக்கொண்டு போராட்டங்கள், மக்கள் கூடுவது, பொதுவான நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் உடனடியாக அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது நினைவு கூறத்தக்கது.  #JigneshMevani