செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கற்பழிப்பு குற்றவாளியை அடித்து கொன்ற பொதுமக்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கற்பழிப்பு குற்றவாளியை கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாம்ஷெட்பூர்:

ஜார்க்கண்ட் மாநிலம் ஆதித்யாபூர் நகரை சேர்ந்தவர் ரத்தன் லோகர் (30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு பெண்ணை கற்பழித்தார்.

அதற்காக அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் பரோலில் வெளியே வந்து இருந்தார்.

ஆதித்யாபூரில் ராம் மதியா பாஸ்டி பகுதியில் தனது வீட்டில் தங்கியிருந்தார். அவர் அங்கு தங்கியிருக்க கூடாது. வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் கும்பலாக சென்று வலியுறுத்தினர்.

அதனால் ஆத்திரம் அடைந்த ரத்தன் லோகர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கூட்டத்தினரை விரட்டினார். அதற்கு பயப்படாத மக்கள் அவரை தாக்க நெருங்கினர்.

அப்போது அவரை அடித்து நொறுக்கிய மக்கள் துப்பாக்கியை பறித்தனர். உடனே அவர் கூட்டத்தினரிடம் இருந்து காரில் தப்பி ஓட முயன்றார். ஆனால் விடாத மக்கள் காரை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்களிடம் இருந்து ரத்தன் லோகரை மீட்டனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ரத்தன் லோகர் பெரிய ரவுடி ஆவார். அவர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. அதன் மீது கோர்ட்டுகளில் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT