ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதா தோல்வி அடைந்தது.
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஹேமந்த் சோரனுடன் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஆலம்கிர் ஆலம், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், ராஷ்டிரீய ஜனதா தள எம்.எல்.ஏ. சத்யானந்த் போக்தா ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஹேமந்த் சோரன் தனது அலுவலகத்துக்கு சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சிறிது நேரத்தில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், முந்தைய பா.ஜனதா அரசு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
ஜார்க்கண்டில் இரட்டை குத்தகை சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை எதிர்த்து கடந்த ஆண்டு மே மாதம் கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ‘பதல்கரி’ என்ற இயக்கத்தை தொடங்கி பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வழக்குகளை தீர்க்க விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஸ்டீபன் மரான்டி இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல். ஏ.க்களுக்கு வருகிற 6-ந்தேதி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.