செய்திகள்

ஜார்க்கண்டில் 3-வது சம்பவம்: ரேசன் பொருள் கிடைக்காததால் முதியவர் பட்டினியால் மரணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா. ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பட்டினியால் ஏற்கனவே 2 பேர் இறந்து உள்ள நிலையில் முதியவர் ஒருவர் பட்டினியால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பட்டினியால் ஏற்கனவே 2 பேர் இறந்து உள்ளனர். கடந்த செப்டம்பர் 28-ந்தேதி 11 வயது சிறுமி சந்தோஷிதேவி இறந்தார். ரேசன் கார்டை ரத்து செய்ததால் அவர் உணவு பொருட்கள் இல்லாமல் பட்டினியால் இறந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த வாரம் 45 வயதான பாஜிநாத் ரவிதாஸ் என்ற ரிக்ஷா தொழிலாளி பட்டினியால் இறந்தார்.

இந்த நிலையில் ஜார்க் கண்ட் மாநிலத்தில் பட்டினியால் 3-வது நபர் இறந்து உள்ளார். அவரது பெயர் ருபாலி மாரண்டி (வயது 64).

தியோசா மாவட்டம் தண்டியாரா கிராமத்தில் அவர் வசித்து வந்தார். ஒரு விபத்தில் அவர் தனது இடதுகாலை இழந்தார். மகள் சனோடி உள்பட 3 பேர் அந்த வீட்டில் வசித்தனர்.

கடந்த சில தினங்களாக உணவு பொருட்கள் இல்லாமல் அவர்கள் பட்டினியால் வாடினர். பசி கொடுமை தாங்க முடியாமல் மாரண்டி இறந்தார்.

அங்குள்ள நியாயவிலை கடையில் அந்த குடும்பத்துக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. சனோடி கைரேகை பொருந்தாததால் ரேசன் பொருட்களை கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் உணவு பொருட்களும் இல்லாமல் பட்டினியால் மாரண்டி இறந்து உள்ளார்.

இதுகுறித்து மாரண்டியின் மகள் சனோடி கூறும்போது, கடந்த சில தினங்களாக உணவு பொருட்கள் எதுவும் இல்லாமல் எங்கள் வீட்டில் சமையல் செய்யவில்லை. பக்கத்து வீட்டில் உள்ள ஒயா என்ற ஆசிரியர்தான் சாப்பாடு கொடுத்தார். பட்டினியால் எனது தந்தை இறந்து விட்டார் என்றார்.