ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் யாதமுரி மோர்தானபள்ளி கிராமத்தில் உள்ள ஆந்திரா வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11½ கிலோ தங்க நகைகள், ரூ.2 லட்சத்து 66 ஆயிரம், சி.சி.டி.வி. கேமராவில் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் ஆகியவை மாயமானதாக யாதமுரி போலீசில் வங்கியின் மேலாளர் முரளிகிருஷ்ணா கடந்த 14-ந் தேதி புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், வங்கி லாக்கரை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கி கட்டடம் மற்றும் வங்கியில் உள்ள லாக்கர் ஆகியவற்றுக்கு எந்த சேதாரமும் இன்றி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11½ கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது.
மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவாகும் காட்சிகள் அதன் ரெக்கார்டரில் பதிவாகாத வகையில் சிதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சித்தூர் எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின்பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை யாதமுரி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், வங்கி கொள்ளை தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் என்பவரை சித்தூர் போலீசார் கைது செய்தனர். அப்போது வங்கியில் திருடிய நகைகளை உருக்கி அதன் மூலம் கிடைத்த 2 தங்க கட்டிகள் அவரிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட ஆந்திரா வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ் 2017-ம் ஆண்டு முதல் பங்குசந்தையில் பண முதலீடு செய்து வந்துள்ளார்.
ஆனால், அதில் அவருக்கு தொடர்ந்து நஷ்டமே ஏற்பட்டுள்ளது.
இதனால், நகைகளை அடமானம் வைக்க வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
பின்னர், அவர்கள் பெயரில் அதே வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இந்த விவகாரம் வாடிக்கையாளர்களுக்கும், வங்கி நிர்வாகத்துக்கும் தெரியாமல் போனது.
இந்த வகையில் கிடைத்த பணம் முழுவதையும் மீண்டும் பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விடுப்பில் சென்ற வங்கி மேலாளர், வங்கியின் லாக்கர் சாவியை ரமேஷிடம் கொடுத்து, அதை பொறுப்பு மேலாளரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ரமேஷ் இந்த சந்தர்ப்பத்தை தனது கஷ்டத்துக்கு கிடைத்த வாய்ப்பாக கருதினார். தொடர்ந்து 2 நாட்களாக பணிக்கு செல்லாமல் லீவு போட்டுவிட்டு வேலூருக்கு சென்று வங்கியின் ஒரிஜினல் லாக்கர் சாவிகளுக்கு மாற்றாக போலி சாவிகளை தயார் செய்தார்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னர் வங்கி காசாளர் லாக்கரின் மாஸ்டர் சாவியை தனது டேபிள் மீது வைத்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த சாவியை திருடிய ரமேஷ், அதை அச்சு எடுத்து, அதன் மூலம் போலி மாஸ்டர் சாவி தயார் செய்தார்.
இதையடுத்து வங்கியின் மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் அலுவல் நிமித்தமாக வங்கியின் மெயின் அலுவலகத்துக்கு சென்றிருந்த நேரத்தில், போலி சாவிகள் மூலம் வங்கி லாக்கரை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை ரமேஷ் கொள்ளையடித்துள்ளார்.
அதன்பிறகு அந்த நகைகளை உருக்குவதற்காக, சித்தூரில் உள்ள மிட்டூர் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, நகைகளை அங்கு பத்திரப்படுத்தி வைத்தார். மேலும் நகைகளை உருக்க தேவையான எந்திரங்களையும் வாங்கி வந்துள்ளார்
இதைதொடர்ந்து, கொள்ளையடித்த நகைகளை உருக்கி 6 தங்க கட்டிகளாக மாற்றிய ரமேஷ், அவற்றில் 2-யை விற்பனைக்காக கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.