செய்திகள்

மார்த்தாண்டம் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

மார்த்தாண்டம் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

மார்த்தாண்டத்தை அடுத்த பள்ளியாடி வாழைத்தோட்டம் பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் நடையை பூசாரி பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் மறுநாள் வழக்கமான பூஜைகள் மேற்கொள்வதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு வந்தனர்.

கொள்ளை தொடர்பாக மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் விக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க செயினை கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கோவில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

மார்த்தாண்டத்தை அடுத்த குளக்கச்சி லெட்சுமி பவன் பகுதியில் பத்திரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் பூஜைக்காக கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்து விசாரணையில் தெரியவந்தது. கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.