செயின் பறிப்பு 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே மொபட்டில் சென்ற பேராசிரியையிடம் நகை பறிப்பு

ஒரத்தநாடு அருகே மொபட்டில் சென்ற பேராசிரியையிடம் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூர் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் கபின். இவரது மனைவி அபிராமி(வயது 27). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அபிராமி தஞ்சையில் இருந்து தனது சொந்த ஊரான தெக்கூர் செல்வதற்காக வெட்டிக்காடு செல்லும் கல்லணை கால்வாய் கரையில் உள்ள தார்சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் மொபட்டில் சென்ற அபிராமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, `திருடன்.. திருடன்..' என்று கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி அபிராமி, ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கல்லூரி பேராசிரியையிடம் நகைப்பறிப்பு சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.