செய்திகள்

கடையநல்லூரில் திமுக நிர்வாகி மனைவியிடம் நகை பறிப்பு

வீட்டில் படுத்து தூங்கிய திமுக நிர்வாகி மனைவியிடம் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவர் தி.மு.க.வில் ஆதி திராவிடர் நல பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி செல்வி (வயது 42).

இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த செல்வியின் கழுத்தில் கிடந்த 28 கிராம் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினான். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி திருடன்,திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அவனை துரத்தி சென்றனர். எனினும் மர்ம நபர் தப்பி சென்று விட்டான்.

இது குறித்து சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சொக்கம்பட்டி பகுதியில் சலவை தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளார். இதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். மேலும் சொக்கம்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரகீம் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

சொக்கம்பட்டி பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.