செய்திகள்

நகை பறிப்பு-திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது: திருத்துறைப்பூண்டியில் சிக்கினான்

நாகை மாவட்டத்தில் கைவரிசை காட்டி வந்த கொள்ளையன் பிடிப்பட்டது திருத்துறைப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்துறைப்பூண்டி:

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள திருமாளம் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் ரமேஷ் (வயது 24) இவர் கடந்த 2 ஆண்டுகளாக பல இடங்களில் வீடு புகுந்து திருடுதல், கடைகளை உடைத்து பொருட்களை கொள்ளையடித்தல், பெண்களிடம் நகை பறித்தல்  உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக நாகை மற்றும் தலைஞாயிறு போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ரமேசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல இடங்களில்  கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் சித்தாயிமூர் மாரியப்பன் என்பவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டதாக தெரிவித்தார். அவரிடமிருந்து லேப்டாப், ரூ.5 ஆயிரம் ரொக்கம், 14 தங்க செயின்கள், 2 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் கைவரிசை காட்டி வந்த கொள்ளையன் பிடிப்பட்டது திருத்துறைப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.