நகை பறிப்பு 
செய்திகள்

செய்யாறு அருகே காரை மறித்து பெண்ணிடம் நகை பறிப்பு

செய்யாறு அருகே காரை மறித்து நகை பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

செய்யாறு:

செய்யாறு அடுத்த விளாநல்லுரை சேர்ந்த துரைசாமி என்பவர் நேற்று இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள ராணிப்பேட்டையை சேர்ந்த உறவினர் முருகன்(33), அவரது மனைவி சுமதி ஆகியோர் காரில் விளாநல்லூர் வந்தனர். நேற்று மாலை இறுதி சடங்கு முடிந்து காரில் புறப்பட்டனர். அப்போது சுமதியின் அண்ணன்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன் அண்ணி லலிதா ஆகியோரும் காரில் வந்தனர். முருகன் காரை ஓட்டி வந்தார். செய்யாறு-தேசூர் சாலையில் செங்காடு மின்வாரிய அலுவலகம் அருகே கார் வந்தபோது பைக் ஒன்று காரின் குறுக்கே நின்றது. இதனால் முருகன் காரை நிறுத்தினார். 

பைக்கில் வந்த வாலிபர் காரை தாறுமாறாக ஓட்டுகிறாய் என தகராறு செய்து முருகன் மற்றும் அவரது மனைவி சுமதியை தாக்கிவிட்டு சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். வாலிபர்கள் தாக்குதலில் காயமடைந்த  முருகன், சுமதி செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.