குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் மாரீஸ்வரி (வயது50). கல்லூரிக்கு செல்வதற்காக வழக்கம்போல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ் ஏறி உள்ளார். கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியபோது அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கூட்ட நெரிசலை பயன் படுத்தி மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பஸ்களில் பயணிகள் போர்வையில் சுற்றிதிரியும் கும்பல் நகைகளை பறித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர ரோந்து பணியால் கொள்ளை சம்பவங்கள், நகை பறிப்பு சம்பவங்கள் குறைந்தன. ஆனால் தற்போது மீண்டும் அரங்கேறி வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.