கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டது. 34 வகையான கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள நகைக்கடைகளில் வர்த்தகர்கள் வர்த்தகத்தை தொடங்கினர். முதல் கட்டமாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
மாதச் சீட்டுக்காக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் நகைக்கடைக்கு வந்திருந்தனர். இதுகுறித்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வருகிறோம். குறைவான ஊழியர்களை அமர்த்தியுள்ளோம். முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைக்கு சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயப்படுத்தியுள்ளோம்.
சமூக இடைவெளியை பின்பற்றி நகைகளை பார்வையிட வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறோம். கடைகள் அடைக்கப்பட்டதால், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர்.
எங்கள் தொழிலை காப்பாற்ற அரசு உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.