பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷி இன்று காலை, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சேர்ந்த மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். இந்தியா அவருக்கு எதிராக சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவரை உடனடியாக கைது செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கூறியது. அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னதாக, உலக பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க இந்தியா கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முயற்சிகளை தடுத்தது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #JeM #MasoodAzar #ShahMahmoodQureshi