போயஸ் கார்டன் வீடு 
செய்திகள்

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றம்- நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு

ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது அவசியம் என்று அரசு முடிவு எடுத்துள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டனில் உள்ள ‘வேதா’ இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கான நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது. வேதா இல்லத்தை நினைவிடமாக்க அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றினால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

இதனால் இப்பகுதியில் மீண்டும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும். ஏராளமான வாகனங்களையும் இந்த பகுதியில் நிறுத்துவார்கள். எனவே எங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் மற்றொரு தரப்பினர் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தினர். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மக்கள் பார்ப்பது அவசியம் என்றும் கூறினார்கள்.

இந்த நில எடுப்பு நிலங்களின் வரைபடங்கள் (பிளான்) கிண்டியில் உள்ள தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் மக்கள் பார்வையிடலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 3 அடுக்கு வீட்டில் பலா மரம்-1, மா மரம் -2, தென்னை-5, வாழை மரங்கள்-5 உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.