செய்திகள்

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் உத்தரவு

ஜெயலலிதா கைரேகை விவகாரம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலின் போது அ.தி. மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ‘பி’ பார்ம் விண்ணப்பத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை பதித்து தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கி இருந்தனர்.

அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி இருந்தார்.

இந்த கைரேகையின் உண்மைத் தன்மை குறித்து தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அந்த விசாரணை நிலுவையில் உள்ளது.

மாற்றத்திற்கான இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு இதே போல் ஒரு புகார் கடிதம் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை பெற்று தேர்தல் கமி‌ஷனில் சமர்பித்துள்ளனர். இந்த கைரேகைக்கு டாக்டர் பாலாஜி சான்றிதழ் அளித்துள்ளார்.

உண்மையிலேயே இந்த கைரேகையை ஜெயலலிதா தான் பதிவு செய்தாரா? என்பதில் பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இதன் உண்மைத் தன்மை குறித்து தேர்தல் ஆணையம் சுதந்திரமான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதேபோல் கொண்டல்ராவ் என்பவரும் தேர்தல் கமி‌ஷனில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த 2 பேர் மனுவையும் இந்திய தேர்தல் கமி‌ஷனின் சார்பு செயலாளர் ராஜன் ஜெயின் பெற்றுக் கொண்டு, அதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புகார்தாரர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் அளிப்பதோடு, ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களையும் இணைத்து இந்திய தேர்தல் கமி‌ஷனுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு இதில் சட்டப்படிதான் தேர்தல் ஆணையம் நடந்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தனி அதிகாரம் உள்ளது. அவரது முடிவை எதிர்த்து கோர்ட்டுக்குதான் செல்ல முடியும் என்றார்.