செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: நீதிபதி ஆறுமுகசாமி நாளை விசாரணை தொடங்குகிறார்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமி‌ஷன் நாளை விசாரணையை தொடங்குகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

விசாரணை கமி‌ஷன் நடைபெறுவதற்காக அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் பார்வையிட்டார்.

விசாரணை நடைபெறும் போது பேசும் உரையாடல் வெளியில் கேட்க கூடாது என்பதற்காக சிறப்பு வடிவமைப்புடன் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் அமைக்கும் பணி முடிந்து விட்டதால் நீதிபதி ஆறுமுகசாமி நாளை தனது விசாரணையை தொடங்குகிறார்.

முதலில் போயஸ்கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவின் வீட்டை பார்வையிடுகிறார். ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத போது தங்கி இருந்த அறையையும் பார்வையிடுகிறார். அப்போது போயஸ் கார்டனில் இருந்தவர்களிடமும் விசாரிப்பார் என தெரிகிறது.

அதன் பிறகு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும் விசாரிக்க செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விவரம் தெரிந்தவர்கள் நீதிபதியிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விளக்கம் தர விரும்புபவர்களின் பெயர் விவரங்கள் பட்டியலிடப்படுகிறது.

அதில் உள்ள வரிசைப்படி ஒவ்வொருவரையும் அழைத்து நீதிபதி விசாரிப்பார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் முதல் பல்வேறு கட்சியினரும் கூறியதால் அவர்களும் நீதிபதி முன்பு ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT