ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அது பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தியது.
இதுவரை 16 பேரிடம் நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அந்த 16 பேரில் 10 பேர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் தர்ம ராஜ், நாராயணபாபு, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குனர் விமலா மற்றும் கலா, மயில்வாகணன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவர்கள் கொடுத்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது.
முதலில் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகனராவ் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ந்தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
அதற்கு அடுத்த நாள் அதாவது 21-ந்தேதி ராம மோகனராவ் ஆஜராக உள்ளார்.
இதற்கிடையே விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து விசாரணை ஆணையத்தின் கால அளவை நீட்டிக்க கோரிக்கைவிடப்பட்டுள்ளது.